الحجر
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும். | الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَقُرْءَانٍۢ مُّبِينٍۢ. ﴿1﴾ |
| 2 நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் ஆசைப்படுவார்கள். | رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ. ﴿2﴾ |
| 3 (நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள். | ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ. ﴿3﴾ |
| 4 எந்த ஓர் ஊரையும் அதற்கென குறிப்பிட்ட ஒரு தவணை இருந்தே தவிர நாம் (உடனே அதை) அழிக்கவில்லை. | وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌۭ مَّعْلُومٌۭ. ﴿4﴾ |
| 5 எந்த ஒரு சமுதாயமும் தங்களது தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். | مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ. ﴿5﴾ |
| 6 மேலும், (உம்மை நோக்கி) “ஓ அறிவுரை (நிறைந்த குர்ஆன்) இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகிறார்கள். | وَقَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌۭ. ﴿6﴾ |
| 7 “நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நம்மிடம் (உமக்கு சாட்சிகளாக) வானவர்களை நீர் கொண்டு வரலாமே?” | لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ. ﴿7﴾ |
| 8 உண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். | مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًۭا مُّنظَرِينَ. ﴿8﴾ |
| 9 நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம். | إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ. ﴿9﴾ |
| 10 (நபியே!) உமக்கு முன்பு முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம். | وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ. ﴿10﴾ |
| 11 அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை, அவரை அவர்கள் கேலி செய்பவர்களாக இருந்தே தவிர. | وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ. ﴿11﴾ |
| 12 (முன்னர் நாம் எப்படி செய்தோமோ) அதுபோன்றே, அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இந்த) குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம். | كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ. ﴿12﴾ |
| 13 (ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும், முன்னோரின் வழிமுறை திட்டமாக சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிந்து போவார்கள்.) | لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ. ﴿13﴾ |
| 14 அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகல் நேரத்தில் அவர்கள் ஏறினாலும், | وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ. ﴿14﴾ |
| 15 அவர்கள் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மாறாக), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாறாக, நாங்கள் மந்திரம் செய்யப்பட்ட மக்களாக ஆகிவிட்டோம்” என்றே கூறுவார்கள். | لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌۭ مَّسْحُورُونَ. ﴿15﴾ |
| 16 திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அதை அலங்கரித்தோம். | وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ. ﴿16﴾ |
| 17 இன்னும், விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டும் அ(ந்த வானத்)தைப் பாதுகாத்தோம். | وَحَفِظْنَٰهَا مِن كُلِّ شَيْطَٰنٍۢ رَّجِيمٍ. ﴿17﴾ |
| 18 எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை பிரகாசமான எரி நட்சத்திரம் பின் தொடரும். | إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ مُّبِينٌۭ. ﴿18﴾ |
| 19 இன்னும், பூமி - அதை நாம் விரித்தோம்; மேலும், அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; மேலும், அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் (அளவையில் அளக்கப்படும்) எல்லா வகையான உணவுகளையும் முளைக்க வைத்தோம். | وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍۢ مَّوْزُونٍۢ. ﴿19﴾ |
| 20 இன்னும், அதில் உங்களுக்கும், மேலும், எவர்களுக்கு நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லையோ அவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்(து கொடுத்)தோம். | وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ. ﴿20﴾ |
| 21 எப்பொருளும் இல்லை, அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. மேலும், குறிப்பிடப்பட்ட ஓர் அளவிலே தவிர அதை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். | وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍۢ مَّعْلُومٍۢ. ﴿21﴾ |
| 22 (மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். ஆக, அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்கு நீர் புகட்டுகிறோம். மேலும், அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை. (நாமே அதை உங்களுக்காக பூமியில் சேகரித்து வைக்கிறோம்.) | وَأَرْسَلْنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَسْقَيْنَٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَٰزِنِينَ. ﴿22﴾ |
| 23 நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும், மரணிக்க வைக்கிறோம். மேலும், நாமே (அனைத்திற்கும்) வாரிசுகள் (-இறுதி உரிமையாளர்கள்) ஆவோம்! | وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ. ﴿23﴾ |
| 24 திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்; இன்னும், (உங்களில்) பின் வருபவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம். | وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ. ﴿24﴾ |
| 25 இன்னும், (நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில் உயிர்ப்பித்து) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன். | وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌۭ. ﴿25﴾ |
| 26 மேலும், திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம். | وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ. ﴿26﴾ |
| 27 இன்னும், (மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். | وَٱلْجَآنَّ خَلَقْنَٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ. ﴿27﴾ |
| 28 மேலும், (நபியே!) நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்” என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! | وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًۭا مِّن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ. ﴿28﴾ |
| 29 ஆக, “நான் அவரை செம்மைபடுத்தி, அவரி(ன் உடலி)ல் நான் படைத்த உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!” (என்று வானத்தில் உள்ளோருக்கு நாம் கட்டளையிட்டோம்.) | فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ. ﴿29﴾ |
| 30 ஆக, (அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள், | فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ. ﴿30﴾ |
| 31 இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு அவன் மறுத்(து பிடிவாதம் பிடித்)தான். | إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ. ﴿31﴾ |
| 32 (அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாமல் இருக்க உனக்கென்ன நேர்ந்தது?” | قَالَ يَٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ. ﴿32﴾ |
| 33 (இப்லீஸ்) கூறினான்: “பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவனாகிய) நான் சிரம் பணிவது எனக்கு சரி இல்லை. (அது என்னால் முடியாது!)” | قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ. ﴿33﴾ |
| 34 (அல்லாஹ்) கூறினான்: “ஆக, இதிலிருந்து நீ வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.” | قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ. ﴿34﴾ |
| 35 “இன்னும், நிச்சயமாக உன் மீது (எனது) சாபம், கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகட்டும்!” | وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ. ﴿35﴾ |
| 36 (இப்லீஸ்) கூறினான்: “ஆக, என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு நீ அவகாசமளி!” | قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ. ﴿36﴾ |
| 37 (அல்லாஹ்) கூறினான்: “ஆக, நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டாய்,” | قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ. ﴿37﴾ |
| 38 “(தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் (அந்த மறுமை) நாள் (வருகின்ற) வரை.” | إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ. ﴿38﴾ |
| 39 (இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,” | قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ. ﴿39﴾ |
| 40 “அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.” | إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ. ﴿40﴾ |
| 41 (அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.” | قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ. ﴿41﴾ |
| 42 “நிச்சயமாக என் அடியார்கள் - அவர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் நீ வழிகெடுப்பாய்.)” | إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ. ﴿42﴾ |
| 43 “மேலும், நிச்சயமாக நரகம் (வழிகெடுத்தவனாகிய உனக்கும், வழிகெட்டவர்களாகிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.” | وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ. ﴿43﴾ |
| 44 அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு பிரிவினர் உண்டு. | لَهَا سَبْعَةُ أَبْوَٰبٍۢ لِّكُلِّ بَابٍۢ مِّنْهُمْ جُزْءٌۭ مَّقْسُومٌ. ﴿44﴾ |
| 45 நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள். | إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ. ﴿45﴾ |
| 46 “நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்). | ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ. ﴿46﴾ |
| 47 மேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள். | وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ. ﴿47﴾ |
| 48 அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இன்னும், அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை. | لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌۭ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ. ﴿48﴾ |
| 49 (நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.” | ۞ نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ. ﴿49﴾ |
| 50 “இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!” | وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ. ﴿50﴾ |
| 51 மேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக. | وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ. ﴿51﴾ |
| 52 அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தில் (நடந்த நிகழ்வை கூறுவீராக). ஆக, அவர்கள், “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினார்கள். (இப்ராஹீம்) கூறினார்: ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி அச்சப்படுகிறோம்.” | إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ. ﴿52﴾ |
| 53 அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு (மார்க்கத்தை) அதிகம் அறிந்த ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்.” | قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٍۢ. ﴿53﴾ |
| 54 அவர் கூறினார்: “எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க, எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? ஆக, எந்த அடிப்படையில் (இப்படி) நற்செய்தி கூறுகிறீர்கள்?” | قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ. ﴿54﴾ |
| 55 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள். | قَالُوا۟ بَشَّرْنَٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَٰنِطِينَ. ﴿55﴾ |
| 56 அவர் கூறினார்: “வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளில் யார் அவநம்பிக்கை கொள்வார்?” | قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ. ﴿56﴾ |
| 57 அவர் கூறினார்: “ஆக, (வானவத்) தூதர்களே! (நீங்கள் அனுப்பப்பட்ட) உங்கள் காரியமென்ன?” | قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ. ﴿57﴾ |
| 58 அவர்கள் கூறினார்கள்: “குற்றவாளிகளான மக்களிடம் (அவர்களை அழிக்க) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்.” | قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ. ﴿58﴾ |
| 59 “(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்போம்.” | إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ. ﴿59﴾ |
| 60 “(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் இருப்பார் என்று (அல்லாஹ்வின் கட்டளையின்படி) நாங்கள் முடிவு செய்தோம்.” | إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآ ۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَٰبِرِينَ. ﴿60﴾ |
| 61 ஆக, (வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது, | فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ. ﴿61﴾ |
| 62 அவர் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அறிமுகமற்ற கூட்டமாகும்!” | قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ. ﴿62﴾ |
| 63 அவர்கள் கூறினார்கள்: “மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை (-அல்லாஹ்வின் தண்டனையை) உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.” | قَالُوا۟ بَلْ جِئْنَٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ. ﴿63﴾ |
| 64 “இன்னும், உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.” | وَأَتَيْنَٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ. ﴿64﴾ |
| 65 “ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் நீர் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றி செல்வீராக; மேலும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும், நீங்கள் ஏவப்பட்ட இடத்தை நோக்கி (இதே நிலையில்) சென்று கொண்டே இருங்கள்.” | فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌۭ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ. ﴿65﴾ |
| 66 “நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள்) பொழுது விடிந்தவர்களாக காலையில் இருக்கும்போது துண்டிக்கப்படும்” என்று (அவர்களின்) காரியத்தை முடிவு செய்து அவருக்கு அறிவித்தோம். | وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقْطُوعٌۭ مُّصْبِحِينَ. ﴿66﴾ |
| 67 மேலும், அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (லூத் நபியிடம்) வந்தார்கள். | وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ. ﴿67﴾ |
| 68 (லூத்) கூறினார்: “நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை அவமானப்படுத்தாதீர்கள்.” | قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ. ﴿68﴾ |
| 69 “மேலும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், என்னை இழிவு படுத்தாதீர்கள்” | وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ. ﴿69﴾ |
| 70 அவர்கள் கூறினார்கள்: “(வேறு ஊர்) மக்களை (விருந்துக்கு அழைப்பதை) விட்டும் நாம் உம்மைத் தடுக்கவில்லையா.” | قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَٰلَمِينَ. ﴿70﴾ |
| 71 லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).” | قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ. ﴿71﴾ |
| 72 (நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள். | لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ. ﴿72﴾ |
| 73 ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது. | فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ. ﴿73﴾ |
| 74 ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; | فَجَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن سِجِّيلٍ. ﴿74﴾ |
| 75 படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன. | إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْمُتَوَسِّمِينَ. ﴿75﴾ |
| 76 இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது. | وَإِنَّهَا لَبِسَبِيلٍۢ مُّقِيمٍ. ﴿76﴾ |
| 77 நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. | إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ. ﴿77﴾ |
| 78 மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள். | وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ. ﴿78﴾ |
| 79 ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன. | فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍۢ مُّبِينٍۢ. ﴿79﴾ |
| 80 மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள். | وَلَقَدْ كَذَّبَ أَصْحَٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ. ﴿80﴾ |
| 81 இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர். | وَءَاتَيْنَٰهُمْ ءَايَٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ. ﴿81﴾ |
| 82 மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர். | وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ. ﴿82﴾ |
| 83 ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது. | فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ. ﴿83﴾ |
| 84 ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை. | فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ. ﴿84﴾ |
| 85 மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக. | وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ. ﴿85﴾ |
| 86 நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன். | إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ. ﴿86﴾ |
| 87 இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம். | وَلَقَدْ ءَاتَيْنَٰكَ سَبْعًۭا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ. ﴿87﴾ |
| 88 இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!). | لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ. ﴿88﴾ |
| 89 இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக. | وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ. ﴿89﴾ |
| 90 (வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்). | كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ. ﴿90﴾ |
| 91 அவர்கள் குர்ஆனைப் (பற்றி அது சூனியம், அது கவிதை, அது குறி கூறும் வாசகம் என்று வர்ணித்து அதைப்) பல வகைகளாக ஆக்கினார்கள். | ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ. ﴿91﴾ |
| 92 ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரிடமும் நாம் விசாரிப்போம், | فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ. ﴿92﴾ |
| 93 அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி. | عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ. ﴿93﴾ |
| 94 ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக. | فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ. ﴿94﴾ |
| 95 (நபியே! உம்மை) கேலிசெய்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம். | إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ. ﴿95﴾ |
| 96 அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள். | ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ. ﴿96﴾ |
| 97 (நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம். | وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ. ﴿97﴾ |
| 98 ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக! | فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ. ﴿98﴾ |
| 99 மேலும், உங்களுக்கு ‘யகீன்’ - நம்பிக்கை (எனும் மரணம்) வருகின்ற வரை உம் இறைவனை வணங்குவீராக! | وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ. ﴿99﴾ |